'தல' கொடுத்த தில்.. அஜித்துடனான பைக் பயணம் வாழ்க்கையையே மாத்திடுச்சு - மஞ்சு வாரியர் நெகிழ்ச்சி!
சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் ‘மாஸ்’ காட்டும் அஜித் குமார், தன் கூட நடிப்பவர்களையும் பைக் பிரியர்களாக மாற்றிவிடுவார் போல! மஞ்சு வாரியர், ஆர்யா, சரத்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகவுள்ள 'மிஸ்டர் X' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகை மஞ்சு வாரியர் தனது பைக் பயணம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

'துணிவு' படத்தின் படப்பிடிப்பின் போது, அஜித்துடன் இணைந்து லடாக் மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்கு மேற்கொண்ட பைக் பயணம், தனது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அனுபவம் என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பயணத்திற்குப் பிறகுதான் பைக் ஓட்டக் கற்றுக்கொண்ட மஞ்சு வாரியர், விடாமுயற்சியால் ஓட்டுநர் உரிமம் பெற்றதோடு, ஒரு சொகுசு பிஎம்டபிள்யூ பைக்கையும் சொந்தமாக வாங்கினார்.

"பயணம் என்பது ஒரு மனிதனைத் தன்னடக்கம் மிக்கவனாகவும், சாந்தமானவனாகவும் மாற்றும். மலைகளையும், இயற்கையையும் பார்க்கும்போது நம்முடைய பிரச்சினைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றும்" என அவர் தத்துவார்த்தமாகப் பேசியுள்ளார்.
