தொடரும் அவலம்... 10 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 3 சிறுவர்கள் அட்டூழியம்!
அசாம் மாநிலத்தின் பார்பெட்டா மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி ஒருவர், மூன்று சிறுவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அசாம் மாநிலம் பார்பெட்டா மாவட்டத்தின் பாக்பார் பகுதிக்குட்பட்ட சாச்ரா கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அச்சிறுமிக்குத் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவர் பாதியிலேயே பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு தனியாகப் புறப்பட்டுள்ளார்.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சிறுமி நடந்து சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் சிறுமியை வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சிறுமிக்கு 3 பேரும் பாலியல் தொந்தரவு கொடுத்டு, வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் எங்கே சிறுமி தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற நோக்கில், சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, உடலை அங்கேயே வீசிவிட்டு மூன்று பேரும் தப்பியோடியுள்ளனர்.
மாலை நேரமாகியும் தங்களது மகள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர்கள், கிராம மக்களின் உதவியுடன் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிச் சென்ற போது, சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் பார்பெட்டா மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்துக் கொலை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தேடுதல் வேட்டை நடத்தி 3 சிறுவர்களையும் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
