நூற்றாண்டின் பெரும் சோகம்... வெனிசுலா நிலநடுக்கத்தில் 40,000 பேர் மாயமானதாக அதிர்ச்சித் தகவல் - பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு!
வெனிசுலாவில் ஏற்பட்ட ஒரு நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான இரட்டை நிலநடுக்கப் பேரிடரில், சுமார் 40,000 பேர் வரை காணாமல் போயுள்ளதாகசர்வதேச ஊடகங்கள் மற்றும் மீட்பு முகமைகள் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் இடிந்து விழுந்த நூற்றுக்கணக்கான கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
வெனிசுலா சுகாதாரத்துறை மற்றும் அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்க விபத்துகளில் சிக்கிப் படுகாயமடைந்த 4,300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் கராகஸ் மற்றும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலோர நகரான லா குவைரா ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அடியோடு சரிந்து விழுந்துள்ளன. அல்டாமிரா பகுதியில் 22 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், மாயமான 40,000 பேரைத் தேடும் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது. அவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், ஐக்கிய நாடுகள் சபையின் சான்றளிக்கப்பட்ட சர்வதேசப் பேரிடர் மீட்புக் குழுவினர் வெனிசுலா விரைந்துள்ளனர்.

வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் வீடுகளை மறுசீரமைக்க 200 மில்லியன் டாலர் அவசரக்கால நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. 30-க்கும் மேற்பட்ட வலுவான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதையும் பொருட்படுத்தாமல், ராணுவத்தினரும் உள்ளூர் தன்னார்வலர்களும் இரவு பகல் பாராது இடிபாடுகளை அகற்றி உயிர்களைக் காக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
