ஜனநாயகன் ரிலீஸில் தொடரும் இழுபறி... சென்சார் முடிவால் மீண்டும் சிக்கல்!

 
ஜனநாயகன் ஜனநாயகன்

தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படம் என எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு, தணிக்கை குழுவின் (CBFC) பிடிவாதத்தால் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

நேற்று தணிக்கை குழுவினர் படத்தைப் பார்த்த நிலையில், படக்குழுவினர் நேற்றே சான்றிதழ் கிடைத்துவிடும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து ஆட்சேபனை தெரிவித்துள்ள தணிக்கை குழு, இறுதி முடிவைத் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) அறிவிப்பதாகத் தெரிவித்துவிட்டது. இதனால் பெரும் முதலீட்டில் படத்தை எடுத்துள்ள கே.வி.என் புரோடக்‌ஷன்ஸ் அதிர்ச்சியில் உள்ளது.

ஜனநாயகன்

ஏற்கனவே இப்படம் ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் சென்சார் விவகாரத்தால் நீதிமன்ற வழக்கு வரை சென்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி படத்தின் எச்டி பிரிண்ட் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசியவிடப்பட்டது படக்குழுவிற்குப் பேரிடியாக அமைந்தது.

இது தொடர்பாகத் தமிழக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி, எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து காட்சிகளைத் திருடிய உதவி எடிட்டர் உட்பட 6 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்தப் பிரம்மாண்ட படம் லீக் ஆனதற்குத் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

ஜனநாயகன்

கிட்டத்தட்ட ₹500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரிலீஸிற்கு முன்பே இணையத்தில் கசிந்ததால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைத்த பிறகே அடுத்தகட்ட ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவிக்க முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களும், விஜய் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.