தேசிய அரசியலில் சலசலப்பு... 'இந்தியா' கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கும் - காங்கிரஸுடனான விரிசல் எதிரொலி!

 
இண்டியா கூட்டணி இண்டியா கூட்டணி

வரும் ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக பங்கேற்காமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் வரை திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணித்து வந்தன. தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்த சூழலில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறியது. ஆளுங்கட்சியான தவெக-வுடன் கரம் கோர்த்த காங்கிரஸ், தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திலும் பங்கெடுத்துள்ளது.

இந்தியா கூட்டணி இண்டியா

தங்களைக் கைவிட்டு தவெக-வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸின் இந்தச் செயலால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, நாடாளுமன்ற மக்களவையில் தங்களது கட்சி எம்பிக்களுக்குக் காங்கிரஸ் எம்பிக்கள் அமரும் பகுதிக்கு அருகில் இல்லாமல், தள்ளி தனியாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக மக்களவைக் குழுத் தலைவர் கனிமொழி அண்மையில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். தேசிய அளவில் பாஜாக-விற்கு எதிராகத் திரட்டப்பட்ட 'இந்தியா' கூட்டணிக்குக் காங்கிரஸ் கட்சியே தலைமை தாங்கி வழிநடத்துகிறது.

இந்தியா கூட்டணி

தமிழகத்தில் தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு தவெக அரசுடன் கை கோர்த்துள்ள காங்கிரஸ் தலைமை தாங்கும் கூட்டத்தில் தற்போதைய சூழலில் பங்கேற்பது சரியாக இருக்காது என திமுக தலைமை கருதுகிறது. இதன் காரணமாகவே, டெல்லியில் ஜூன் 8 அன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடும் 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.