இரண்டு மகன்களும் துரத்தி விட்ட கொடுமை... தம்பதியர் விஷமருந்தி தற்கொலை - மதுரையில் கொடுமை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி (72), இவரது மனைவி முத்துலட்சுமி (65). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்தும், இரண்டு மகன்களுமே தங்களது பெற்றோர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளாமல் தனியே அலைக்கழிய விட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த தம்பதியர் தங்களின் சொந்த ஊரிலேயே வாடகைக்கு சிறிய வீட்டு எடுத்து, தனியே தங்கியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில், வயதான காலத்தில் ஆசையாக பாசத்தைக் கொட்டி வளர்த்த மகன்களே தங்களைக் கவனித்துக் கொள்ள முன்வராத நிலையில், மன உளைச்சலுக்குள்ளாகி தினமும் கண்ணீர் வடித்துள்ளனர். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாயாண்டியும், முத்துலட்சுமியும் தங்களது மகன்கள் தங்களை நிராதரவாக விட்டது குறித்து மன அழுத்தத்தில் விஷம் குடித்து விபரீத முடிவெடுத்துள்ளனர்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்த போது இருவரும் மயங்கிக் கீழே விழுந்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உசிலம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற பிள்ளைகள் இருந்தும் ஆதரவின்றி தவித்து வந்த தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
