பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராதீங்க - மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

 
வெயில் வெயில்

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளின்றி பகல் நேரங்களில் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூன் மாதம் பிறந்துள்ள நிலையிலும் வெயிலின் கொடுமை குறையாமல், பல மாவட்டங்களில் சதம் அடித்து வருகிறது. இதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்க மத்திய சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளைப் பரிந்துரைத்துள்ளது. தினசரி மதியம் பகல் 12 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வெயிலின் தாக்கம் மிகக் கொடூரமாக இருக்கும் என்பதால், இந்தத் குறிப்பிட்ட நேரங்களில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயில்

வெயில் அதிகமாக இருக்கும் மதிய வேளைகளில், திறந்தவெளிகளில் நீண்ட நேரம் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதையோ அல்லது அதிக உடல் உழைப்பைக் கோரும் கடினமான வேலைகளில் ஈடுபடுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கோடை காலத்தில் வீடுகளுக்குள் காற்றோட்டம் குறைவாக இருக்கும் சூழலில், சமையல் அறைகளில் இருந்து வெளியாகும் வெப்பம் குறித்தும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில், சமையலறைகளில் நீண்ட நேரம் நின்று சமையல் செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சமையலறையின் ஜன்னல்களைத் திறந்து வைத்துப் போதிய காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயில் வெப்பம் கோடை பெண்கள்

இத்தகைய சூழலில், வெயிலின் கொடுமையால் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கப் பொதுமக்கள் அனைவரும் தினசரி அதிகளவிலான குடிநீர், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளைப் பருக வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.