"ஐநா வரும் நெதன்யாகுவைக் கைது செய்ய ஆலோசனை!

 
நெதன்யாகு

செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வரவிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்வதற்கான சட்ட வழிகள் குறித்து நியூயார்க் மாநகராட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நியூயார்க் மாநகரத்தின் புதிய மேயரான ஜோஹ்ரான் மம்தானி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  வாரண்டின் அடிப்படையில் இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்ய உள்ளூர் சட்டத்தில் இடம் உள்ளதா என்பது குறித்துச் சட்ட நிபுணர்களுடன் விவாதித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். பிரபல ஊடகமான 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழின் போட்காஸ்ட் நேர்காணலில் பங்கேற்ற மேயர் ஜோஹ்ரான் மம்தானி, இஸ்ரேல்-காசா போரில் நெதன்யாகுவின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

"இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள 'தி ஹேக்' சிறையில்தான் இருக்க வேண்டும். அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க் குற்றவாளி. கடந்த சில ஆண்டுகளாக அவரது அரசாங்கம் நிகழ்த்திய கொடூரங்களின் அடிப்படையில் பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்" என்று மம்தானி வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நெதன்யாகு

தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே, நெதன்யாகு நியூயார்க் வந்தால் அவரைக் கைது செய்ய நியூயார்க் காவல்துறைக்கு உத்தரவிடுவேன் என்று மம்தானி உறுதியளித்திருந்தார். தற்பொழுது மேயராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதற்கான சட்ட அதிகாரம் தனக்கு உள்ளதா என்பதை மாநகரத்தின் சட்டத் துறையுடன் (Law Department) தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"தேசிய அளவில் சில தலைவர்கள் தங்களுக்குத் தகுந்தாற்போல் சட்டங்களை எழுத நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டுச் செயல்பட விரும்பவில்லை. நியூயார்க் நகரச் சட்டம் எதை அனுமதிக்கிறதோ, அதன்படி மட்டுமே எங்கள் நிர்வாகம் செயல்படும்" என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இஸ்ரேல் நெதன்யாகு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஏற்காத நிலையிலும், வெளிநாட்டுத் தலைவர்களுக்குத் தரப்படும் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளதாலும், மேயருக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்று இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் பதிலடி கொடுத்துள்ளனர். ஐநாவிற்கான இஸ்ரேல் தூதர் டேனி டானோன் கூறுகையில், "நெதன்யாகு பெருமையுடன் நியூயார்க் வந்து ஐநாவில் உரையாற்றுவார். கைது செய்யப்பட வேண்டியது நெதன்யாகு அல்ல, மேயர் மம்தானிதான்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தின் இந்த வாரண்டைக் கடுமையாக எதிர்த்து வருவதால், மேயர் மம்தானி நெதன்யாகுவைக் கைது செய்ய முயன்றால் அதிபர் ட்ரம்ப் நேரடியாக இதில் தலையிட்டுத் தடுத்து நிறுத்தக்கூடும் என்றும் அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.