வட்டி விகிதத்தை உயர்த்தியது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்... உலக சந்தையில் பெரும் தாக்கம் - தங்கம் விலை சரியும்!
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனது பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வட்டி விகிதமானது 3.75% முதல் 4.00% என்ற இலக்கு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் புதிய வர்த்தகக் கொள்கைகளால் பணவீக்கம் மீண்டும் அதிகரித்துவிடும் என்ற அச்சம் பெடரல் ரிசர்வ் வாரியத்திடம் எழுந்துள்ளது. இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீத பணவீக்க எல்லையை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது இதுவே முதல்முறையாகும். இதற்கு முந்தைய காலகட்டங்களில் வட்டி குறைப்பு அல்லது சீரான நிலைப்பாடு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வட்டி உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட அனைத்து வகையான நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் படிப்படியாக உயர வாய்ப்புள்ளது.

அமெரிக்க அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதங்கள் உச்சத்தில் இருக்கும் சூழலில், ஃபெட் வங்கியின் இந்த வட்டி உயர்வும் சேர்ந்து உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளிப்படையாக வெளியேறும் அபாயம் உருவாகியுள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்புப்படி, நடப்பு ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய நிதிச் சந்தைகளில் தொடர் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
