வைரலாகும் வீடியோ... குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் நபர் - சென்னையில் அசத்தல்!
சென்னையின் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், சோமேட்டோ ஊழியர் ஒருவர் குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை பாலவாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவைச் சேர்க்கும் நோக்கில் அந்த ஊழியர் குதிரையை உணவு டெலிவரி செய்வதற்காகப் பயன்படுத்தியுள்ளார். ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வாகன நெரிசலுக்கு மத்தியில் இவர் கையாண்ட இந்த மாற்று வழி பொதுமக்களிடையேயும், வாடிக்கையாளர்களிடையேயும் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
குதிரையில் சவாரி செய்தபடியே உணவுப் பையுடன் பயணிக்கும் இந்த வீடியோ காட்சியைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்: நெரிசலான சாலையில் கூலாக குதிரையில் சென்று டெலிவரி செய்யும் அவரது விசித்திரமான முயற்சியை நெட்டிசன்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ ட்ரெண்டாகி வருவதோடு, சென்னை மக்களின் அன்றாட டிராஃபிக் பிரச்சனை குறித்தும் மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
