வைரலாகும் வீடியோ... சீமான் பிரசாரத்தில் ‘TVK’ என கத்தியதால் பரபரப்பு - சீமான் ரியாக்‌ஷன் என்ன?!

 
சீமான் சீமான்

புதுச்சேரியில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்த சீமான், த.வெ.க தொண்டர்களுடன் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் தனது பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் திடீரென "TVK.. TVK.." என உரத்த குரலில் முழக்கமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சீமான், தனது உரையை நிறுத்திவிட்டு மைக் மூலமாகவே அவர்களைக் கடுமையாகச் சாடினார்.

த.வெ.க தொண்டர்களைப் பார்த்து மைக் பிடித்து சீமான் பேசுகையில், "டேய்.. இங்க வந்து ஏன்டா கத்துற? அங்க போய் கடையில டீ வித்துக்கோ போடா! போடா டேய்.. இங்க வந்து டீ வித்துட்டு போ!" என ஆவேசமாகச் சத்தமிட்டார்.

இந்த வார்த்தைகளால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், த.வெ.க தொண்டர்களை நோக்கிப் பாய்ந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்க முயன்றதால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

சீமான்

நிலைமை கைமீறிச் செல்வதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், உடனடியாக இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு இரு தரப்பினரையும் கலைந்து செல்லச் செய்து சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, "அவனுக்கும் சேர்த்துத்தான் நான் இங்கே கத்திக் கொண்டிருக்கிறேன்" என்று கூறிய சீமான், மீண்டும் தனது பிரசாரத்தைத் தொடர்ந்தார். இந்தச் சம்பவத்தால் மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 10 நிமிடங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் நிலவியது.