பகீர் வீடியோ.. விபத்தில் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் வீசிய போலீசார்.. வெடித்த சர்ச்சை..!

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள பகுலி தேசிய நெடுஞ்சாலையில், டிரக் ஒன்று மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். அந்த நபரின் சடலம் அப்படியே சாலையில் கிடந்ததையடுத்து, அவ்வழியாகச் சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த முற்பட்டனர். ஆனால், அந்தச் சடலத்தை முறைப்படி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்யாமல், அருகில் இருந்த ஆற்றுக்குள் போலீசார் வீசியுள்ளனர்.
बिहार पुलिस की शर्मनाक करतूत, सड़क दुर्घटना में मृत शख्स के शव को उठाकर नहर में फेंका.
— Utkarsh Singh (@UtkarshSingh_) October 8, 2023
📍फकुली, मुजफ्फरपुर pic.twitter.com/fE7CRMYo3R
இதை அவ்வழியாகச் சென்ற ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இதையடுத்து, பீகார் போலீசார் மீது விமர்சனங்களும் கண்டனங்களும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, ஆற்றில் வீசிய சடலத்தை எடுத்த போலீசார், பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இந்த சம்பவம் குறித்த முதலில் விளக்கம் அளித்த போலீசார், உயிரிழந்த நபரின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சாலையில் சிக்கி கிடந்த உடலின் சில பாகங்கள் மட்டுமே ஆற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் கூறுகையில், ’இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக ஓட்டுநர் கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்துள்ளோம். மேலும், பணியில் இருந்த இரண்டு ஊர்க்காவல் படை வீரர்களின் ஒப்பந்தத்தையும் நிறுத்திவைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.