மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ஜெயிலர் பட வில்லன்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..!!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் 'காளை', 'திமிரு', 'சிறுத்தை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று அவர் வில்லனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியாகி மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விநாயகன் தற்போது கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். நேற்று அவர் வசித்துவரும் எர்ணாகுளம் அடுக்குமாடிக் குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தவர்கள் எர்ணாகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நடிகர் விநாயகனை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார்.
அப்படி அழைத்துச் செல்லப்பட்ட விநாயகன் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, மீண்டும் அங்கு சத்தம் போட்டுள்ளார். மேலும், அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் மீது எர்ணாகுளம் போலீஸார், காவல் நிலைய பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தார் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் ரத்தத்தில் மதுவின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர்.