கன்னிகைப்பேர் துயரம்.. கண்கலங்கிய முதல்வர் விஜய்.. 10 நிமிஷத்துக்கு ஒருமுறை முதல்வருக்கு அப்டேட்.. அமைச்சர் குமார் பேட்டி!

 
வாயு அமைச்சர் குமார்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேர்ந்த கொடூர அமோனியா வாயு கசிவு விபத்து, ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் நச்சு வாயுவைச் சுவாசித்து 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலையை நேரில் கண்டு அமைச்சர் குமார் கண்கலங்கியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் அவசர உத்தரவின் பேரில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், சிகிச்சைகளை மேற்பார்வையிடவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் குமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நிலையை நேரில் பார்த்த போது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நச்சு வாயுவின் தாக்கத்தால் அவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அமோனியா வாயு கசிவு மருத்துவமனை

இக்கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி அறிந்ததும், நாளை தனது பிறந்தநாள் வரவிருக்கும் சூழலிலும் முதலமைச்சர் விஜய் அவர்கள் சொல்லொணா அதீத வேதனையடைந்தார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர்தர மருத்துவச் சிகிச்சை தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு எனக்குக் கண்ணீருடன் உத்தரவிட்டுள்ளார்" என அமைச்சர் குமார் தெரிவித்தார்.

நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்டு வாய் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டவர்களில், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 23 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமோனியம் வாயு

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள 8 பேரும், வாழ்வாதாரம் தேடித் தமிழகம் வந்து இந்த இறால் பதப்படுத்தும் ஆலையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த வடமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்துயரச் சம்பவம் தொடர்பாகப் பெரியபாளையம் போலீஸார் ஏற்கனவே ஆலை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, 'செயிண்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ்' நிறுவனத்தின் உயர் நிர்வாகி டேனியல் உட்பட இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் 24 மணி நேரத்திற்குள் முதற்கட்ட இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.