கள்ளழகரைக் காண வந்து அட்ராசிட்டி செய்த தவெக தொண்டர்கள்... அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பரபரப்பு!
மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட இந்த ஆன்மீக விழாவில், ஒரு சில இளைஞர் குழுக்களின் செயல்பாடுகள் பக்தர்களிடையே சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கள்ளழகரை வரவேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்திருந்தனர். அப்போது உற்சாக மிகுதியால் ஒரு தரப்பு இளைஞர்கள் பக்திப் பாடல்களுக்குப் பதிலாக சினிமா பாடல்களுக்குக் குத்தாட்டம் போட்டனர். இது அங்கு வந்திருந்த முதியவர்கள் மற்றும் பெண் பக்தர்களுக்குச் சற்று முகம் சுளிப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொண்டாட்டத்தின் நடுவே, ஆன்மிக விழாவைத் தங்களது விருப்பமான சினிமா மற்றும் அரசியல் அடையாளங்களை வெளிப்படுத்தும் தளமாகச் சிலர் பயன்படுத்திக் கொண்டனர்.
இன்று நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் என்பதால், கள்ளழகரை வரவேற்கும் கூட்டத்திற்கு நடுவே அஜித்தின் உருவப்படம் ஏந்திய பெரிய பேனர்களுடன் ரசிகர்கள் வலம் வந்தனர். "மதுரையின் கள்ளழகருக்கு வாழ்த்துகள், எங்களின் 'ஏகே'-வுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்" என அவர்கள் முழக்கமிட்டனர்.

மற்றொருபுறம், நடிகர் விஜய் தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் கொடி மற்றும் சின்னம் பொறித்த தலைப்பாகைகளை அணிந்துகொண்டு இளைஞர்கள் திரளாகப் பங்கேற்றனர். அரசியல் அடையாளங்களுடன் அவர்கள் செய்த முழக்கங்கள் ஆன்மீக விழாவின் அமைதியைக் குலைப்பதாக அங்கிருந்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
மதுரையின் பாரம்பரியமான இந்த ஆன்மிக விழாவில் சினிமா மற்றும் அரசியல் மோகத்தைப் புகுத்துவது முறையல்ல எனப் பல மூத்த பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பக்தி பரவசத்துடன் அழகரைத் தரிசிக்க வந்த இடத்தில், இதுபோன்ற "அட்ராசிட்டி" செயல்கள் விழாவின் மாண்பைக் குறைப்பதாகச் சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் எழுந்துள்ளன.
