அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்க வாய்ப்பு... "முட்டாள்தனமான செயலுக்குப் பதிலடி உண்டு!" - ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

 
அமெரிக்கா ஈரான் அமெரிக்கா ஈரான்

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா - ஈரான் இடையேயான போர், ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

ஈரான் ராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின் மூத்த அதிகாரி முகமது ஜாபர் ஆசாதி இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா எந்தவொரு வாக்குறுதியையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன என்று அவர் சாடியுள்ளார்.

ஈரான் அமெரிக்கா

அமெரிக்கா மீண்டும் ஏதேனும் "முட்டாள்தனமான" ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஈரான் தனது முழு வலிமையையும் கொண்டு பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் வழங்கிய புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்க மறுத்ததே இந்தப் புதிய பதற்றத்திற்குக் காரணமாகும். "ஈரானின் முன்மொழிவுகள் திருப்திகரமாக இல்லை" என்று டிரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே ஈரான் ராணுவம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தையைப் பின்னுக்குத் தள்ளி, பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

ஈரான் அணு

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த மோதலால் ஈரான் கடும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. ஈரானில் பணவீக்கம் 50 சதவீதத்தைக் கடந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி சுமார் 6 பில்லியன் டாலர் வரை முடங்கியுள்ளது. பால், ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. போர் மீண்டும் தொடங்கினால், சர்வதேசச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.