தொடரும் போர்ப்பதற்றம்... 2 வது முறையாக இஸ்ரேல் அதிபர் மகனின் திருமணம் ரத்து...!

இஸ்ரேல் – ஈரான் போர் தொடர்ந்து 7 வது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று ஜெருசலேம் பகுதியில் இரவு முழுவதும் ஈரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதால் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலை குறி வைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
200 ட்ரோன்கள், 450 ஏவுகணைகளை ஏவி குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகளில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படும் நிலையில், அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பீர் ஷேவாவில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சொரோகா மருத்துவமனையை ஆய்வு செய்த பிறகு நெதன்யாகு, தனது குடும்பத்தின் தனிப்பட்ட விஷயத்தை பற்றிப் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
🇮🇱 “Everyone is paying the price for War - My Son had to cancel a Wedding”
— Concerned Citizen (@BGatesIsaPyscho) June 19, 2025
Benjamin Netanyahu speaking this morning outside some of the bombing devastation. pic.twitter.com/MCIbOnN6XX
அதன்படி நெதன்யாகு, ”ஹிட்லரின் நாஜிகள் பிரிட்டனில் குண்டு வீசியது போல இஸ்ரேல் மீது ஈரான் குண்டு வீசியிருக்கிறது. இந்த குண்டுவீச்சு பலரை பாதித்திருக்கிறது, பலர் உயிரிழந்திருக்கின்றனர். போரில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் போரின் தனிப்பட்ட விலையைச் செலுத்துகிறார்கள். என்னுடைய மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவரை மணம் முடிக்க இருந்தவருக்கும் இந்த குண்டுவீச்சால் மிகவும் சோகமாக உள்ளனர். இது தனது குடும்பத்தினர் செலுத்திய “தனிப்பட்ட செலவு” எனக் கூறியிருக்கிறார்.
தற்போது, மகனின் திருமணம் ரத்து செய்யப்பட்டதையும் உயிரிழப்பையும் ஒன்று போல பேசியதற்காக இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை பலரும் விமர்சித்து வருகின்றனர். பொதுமக்களின் பிரச்சினைகளை விட நெதன்யாகு தனது பிம்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மகன் அவ்னரின் திருமணம் 2024 நவம்பரில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பிரதமர் வீட்டில் இல்லாதபோது ஹெஸ்பொல்லாவின் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் அப்போது ஒத்திவைக்கப்பட்டது.பின்னர், அந்த திருமணம் திங்கட்கிழமை ஜூன் 16ம் தேதி மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது முன்னோடியில்லாத வகையில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போர் ஏற்படும் என்ற அச்சத்தைத் தூண்டியதால் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.