சூறாவளி பிரச்சாரம் ஓய்ந்தது... தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான தீவிர ஏற்பாடுகள்!

 
வாக்குப்பதிவு தேர்தல்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்டக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சூறாவளிப் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.

மாலை 6 மணிக்குப் பிரச்சாரக் காலம் முடிந்ததை அடுத்து, வெளிமாவட்டங்களில் இருந்து தேர்தல் பணிகளுக்காக வந்திருந்த கட்சியினர் மற்றும் தலைவர்கள் அனைவரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

தற்போதைய அமைதிக் காலத்தை உறுதி செய்யும் வகையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் ஏதேனும் நபர்கள் முகாமிட்டுள்ளனரா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பரப்புரை ஓய்ந்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டுசெல்லும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திருப்பணிகள் அனைத்தும் நாளை இரவுக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

இரண்டு வார கால அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்குப் பிறகு, நாளை மறுநாள் இவ்விரு தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தல் களத்தில் தவெக, திமுக மற்றும் அதிமுக இடையே மும்முனைப் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.