"கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது; அது கலைந்துவிடும்" - கமல்ஹாசன் உருக்கம்!

 
கமல் கமல்

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது திமுக உடனான தனது உறவு மற்றும் தென்னிந்திய உரிமைகள் குறித்து அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கமல்

கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "நீ ஏன் இன்னும் திமுகவில் சேரவில்லை என கலைஞர் என்னிடம் கேட்டார். அப்போது பதில் சொல்ல எனக்குத் தைரியம் இல்லை. ஆனால் இப்போது சொல்கிறேன், கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது; அது கலைந்துவிடும். 75 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைக் கட்டிக்காத்த குடும்பம் திமுக, அதில் நானும் ஒருவன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதன் மூலம் திமுகவுடனான தனது பிணைப்பை அவர் வெளிப்படுத்தினார்.

"வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது" என்று நாம் முன்பு எழுப்பிய குரல் இன்றும் அதே நிலையில்தான் இருக்கிறது என அவர் கவலை தெரிவித்தார். தமிழக அரசின் 'திராவிட மாடல்' திட்டங்களால் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது வட மாநிலங்களைவிடத் தமிழகம் பெற்றுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் என்றும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு சிறந்த முன்னுதாரணம் என்றும் பெருமிதம் கொண்டார்.

கமல்

ஒன்றிய அரசு வழங்க முன்வரும் சில சலுகைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "இந்த 33% என்பது தூண்டில் நுனியில் வைத்திருக்கும் சின்ன மீன், அதை நாங்கள் கவ்வமாட்டோம்" என அதிரடியாகத் தெரிவித்தார். நாளை நமக்கு நடக்கப்போகும் அநீதிகளுக்கு எதிரான குரலாக நமது குரல் ஒலிக்க வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.