ஆடி மாசம் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி.. சபலத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!
ஆடி மாதத்தை முன்னிட்டு மனைவி தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், கீழ் வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் பழகிய மருந்து விற்பனை பிரதிநிதியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற 3 பெண்கள் உட்பட 5 பேரைச் சென்னை சூளைமேடு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (32) என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு இவரது மனைவி தாயார் வீட்டிற்குச் சென்றதால், சுதர்சன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கீழ் வீட்டில் வசிக்கும் நமீதா (22) என்பவரிடம் சுதர்சன் செல்போன் எண்ணைப் பெற்றுப் பழகியுள்ளார். சுதர்சன் ஆசையாகப் பேசிய உரையாடல்களைப் பதிவு செய்த நமீதா, அதனை வைத்துத் தனது தோழி மோனிகா, அவருடைய கணவர் பாலகிருஷ்ணன், நண்பர் கணேஷ் மற்றும் மற்றொரு தோழி சிவரஞ்சனி ஆகியோருடன் இணைந்து சுதர்சனை மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டம் தீட்டினார்.
நமீதாவைக் காதலிப்பதாக நம்பிய சுதர்சனை வீட்டிற்கு வரவழைத்து, ஆடியோ பதிவுகளைக் காட்டி மிரட்டியுள்ளனர். ரூ.5 லட்சம் பணம் கேட்டு அவரை அடித்துச் சித்ரவதை செய்ததோடு, நமீதாவின் வீட்டு வாடகைச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

மன உளைச்சலுக்கு ஆளான சுதர்சன், நடந்த விவரங்களைத் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவருக்குத் தைரியம் அளித்த மனைவி, கணவரை அழைத்துச் சென்று சூளைமேடு காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நமீதா உட்பட 5 பேரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
