"வீட்டு வேலை செய்த பெண் அமைச்சரானார்!" - மேற்கு வங்கத்தில் வரலாற்றுச் சாதனை படைத்த பாஜக எம்.எல்.ஏ கலிதா மாஜி!
மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பா.ஜ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, கடந்த காலங்களில் சாமானிய வீட்டு வேலைக்காரியாகப் பணிபுரிந்து வந்த கலிதா மாஜி என்ற பெண் தற்பொழுது புதிய அமைச்சராகப் பதவியேற்று ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஆஸ்கிராம் சட்டசபைத் தொகுதியிலிருந்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 37 வயதான கலிதா மாஜியின் கடந்த கால வாழ்க்கை வறுமை நிறைந்தது.

கடந்த 2006-ஆம் ஆண்டு பிளம்பர் வேலை செய்யும் நபரைத் திருமணம் செய்து கொண்ட கலிதா மாஜி, குடும்ப வறுமையின் காரணமாகக் குஸ்காரா பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வது மற்றும் வீட்டைப் பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார். இதன் மூலம் அவர் மாதத்திற்கு வெறும் 4,000 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்தார்.
வறுமையிலும் பா.ஜ.க-வின் தீவிரத் தொண்டராகப் பணியாற்றி வந்த இவருக்குக் கடந்த தேர்தலில் ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிடக் கட்சித் தலைமை வாய்ப்பளித்தது. மக்கள் மத்தியில் தனக்கிருந்த அசாத்திய செல்வாக்கின் மூலம், ஆளுங்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணமே தனக்கு மிகப்பெரிய உத்வேகம் என்று குறிப்பிட்டுள்ள புதிய அமைச்சர் கலிதா மாஜி, பதவியேற்ற பிறகு கண்ணீருடனும் நெகிழ்ச்சியுடனும் தனது எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு சாதாரண வீட்டுப் பணியாளராக இருந்த போதிலும், எனது அன்றாட வேலைகளுக்கு மத்தியிலும் பா.ஜ.க-வின் அனைத்துக் கள நிகழ்ச்சிகளிலும் நான் தொடர்ந்து பங்கேற்று வந்தேன். எனது தொகுதியில் பின்தங்கிய ஏழை மக்களுக்குத் தற்போதும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது; முறையான சுகாதார மையங்களும் இல்லை. எனவே, ஒரு அமைச்சராகவும் எம்.எல்.ஏ-வாகவும் எனது முதல் பணி, எனது தொகுதி மக்களுக்கு ஒரு தரமான அரசு மருத்துவமனையைக் கட்டித் தருவதுதான்" என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்துப் பேசிய அவர், "எனது தொகுதியில் உள்ள கிராமப்புற மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருவதற்கு அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் தினசரி பல்வேறு அச்சுறுத்தல்களையும் சமூகப் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வேன். ஒரு சாதாரண ஏழைப் பெண்ணையும், நலிந்த பிரிவினரையும் பா.ஜ.க-வால் மட்டுமே இந்த அளவிற்குப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உயர்த்த முடியும் என்பதை எனது தற்போதைய அமைச்சர் பதவி நிரூபித்துள்ளது. இறுதிவரை ஏழைகளுக்காகவும், ஊழலற்ற ஆட்சிக்காகவும் மட்டுமே நான் உழைப்பேன்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
