விண்வெளியில் மிதக்கும் உலகக்கோப்பை கால்பந்து.. நாசா விஞ்ஞானிகள் விண்வெளி நிலையத்தில் அதிரடி!

 
விண்வெளியில் கால்பந்து

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், விளையாட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஒரு விண்வெளி நகர்வை நாசா விஞ்ஞானிகள் அரங்கேற்றியுள்ளனர். நடப்பு 2026 மெகா தொடரின் அதிகாரப்பூர்வப் பந்தான 'ட்ரியோண்டா', பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களின் அறிவியல் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ள இந்த அதிநவீன கால்பந்து, விண்வெளி நிலையத்தின் பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசை சூழலில் பல்வேறு இயற்பியல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

'ட்ரியோண்டா' கால்பந்தின் உட்பகுதியில் மிக நுண்ணிய, அதிநவீன சென்சார் தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மைதானத்தில் வீரர்கள் உதைக்கும் போது பந்து செல்லும் வேகம், சுழற்சி மற்றும் அதன் துல்லியமான இருப்பிடத் தரவுகளை இந்த சென்சார்கள் நொடிப் பொழுதில் நடுவர்களின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வல்லமை கொண்டவை.

புவிஈர்ப்பு விசை முற்றிலும் இல்லாத விண்வெளிச் சூழலில், இந்தச் சென்சார்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன மற்றும் பந்தின் வெளிப்புறக் காற்று இயக்கவியல் வடிவமைப்பு அதன் சமநிலையை எவ்விதம் மாற்றியமைக்கிறது என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் தீவிரமாகப் பந்தை மிதக்கவிட்டுச் சோதித்து வருகின்றனர்.

கால்பந்து

இந்த 2026 உலகக்கோப்பை பந்து முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீர் சார்ந்த மைகள் மற்றும் பசைகள் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இதன் சமநிலைத் தன்மை மாறாமல் இருப்பதற்குக் காரணம், இதன் துல்லியமான எடைக் பகிர்மானமே என்று உற்பத்தியாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில் இன்று காலை நடந்து முடிந்த ஈகுவடார் - கியூராசாவ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்த பரபரப்பிற்கு மத்தியிலும், உலகக்கோப்பை கால்பந்து ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் விவகாரம் சர்வதேசக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.