"உலகப் பம்மாத்து, இரட்டை நிலை நாடகம்!" - சிபிஎம் செயலாளர் சண்முகம் மீது முரசொலி விமர்சனம்!

 
 சிபிஎம் செயலாளர் சண்முகம்

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, அதற்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் கே. சண்முகத்தின் கருத்துகளுக்குத் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' தனது தலையங்கத்தில் மிகக் கடுமையான முறையில் விமரிசித்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கூட்டணி மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் குறித்துப் பேசி வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை 'நாடகம்' என முரசொலி நேரடியாகச் சாடியுள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்குப் பிந்தைய அரசியல் நகர்வுகளின் போது, தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத மாற்று சக்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் தவெகவிற்குச் சிபிஎம் ஆதரவளித்தது. இது குறித்துப் பேசியிருந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், "தமிழகத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, விஜய் ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தற்பொழுது முழுமையாக மறுத்துள்ள முரசொலி, "மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும் என்பதற்காகவே விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தந்தோம் என்று மார்க்சிஸ்ட் சண்முகம் கூறுவது எல்லாம் அப்பட்டமான உலகப் பம்மாத்து" என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள முரசொலி நாளேடு, "தமிழக அரசியல் களத்தில் இத்தனை காலம் திமுக, அதிமுக என மாறி மாறிக் கூட்டணி வைத்துப் பேசி வந்தவர்கள், அவை இரண்டுமே இல்லாத ஒரு புதிய கட்சி கூடுதல் இடங்களைக் கைப்பற்றிய உடனே, தங்களின் கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அவசர அவசரமாக முடிவெடுத்துவிட்டனர்.

பொதுவெளியில் எப்போதும் கொள்கைக்காக மட்டுமே பேசுவதாகப் பிம்பத்தைக் கட்டமைக்கும் இவர்கள், தற்பொழுது தங்களின் சுயநல இரட்டை நிலையை மூடிமறைக்கவே ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ என்ற புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்" என்று சாடியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக - சிபிஎம் இடையேயான அரசியல் விரிசல் இந்த விமர்சனத்தின் மூலம் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.