உலக நாடுகள் அதிர்ச்சி... ரஷ்யாவில் மர்மமான நிமோனியாவால் இளம்பெண் ஆய்வாளர் மரணம் - 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில்!

 
ரஷ்யா இளம்பெண்  மரணம்

ரஷியாவின் சைபீரியா பகுதியில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் ஆய்வாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இர்குட்ஸ்க் பிளேக் தடுப்பு நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தர்யா ஷிபிலோவா (28) என்பவர், கடந்த செப்டம்பர் 29 அன்று கடுமையான நிமோனியா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

ஆய்வகத்தில் பணிபுரியும் போது உயிருள்ள பாக்டீரியாக்கள் இருந்த சோதனைக் குழாய் ஒன்று தற்செயலாக உடைந்ததாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனினும், அவர் பணிபுரிந்த துறையுடன் தொடர்புடைய நுண்ணுயிரிகள் எதுவும் அவரது உடலில் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஷிபிலோவாவுடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் சுமார் 200 பேர் ஷெலெகோவ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும், இதுவரை யாருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளதாகவும் அப்பகுதி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஷிபிலோவாவின் மரணத்திற்குப் பிளேக் நோய் காரணமா என்பது குறித்து ரஷியாவின் பொது சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. நிலைமையை நேரில் கண்காணிக்கத் தலைமை அரசு சுகாதார அதிகாரி மாஸ்கோவிலிருந்து சைபீரியா விரைந்துள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் உள்ளூர் நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.