உலகளவில் முதல் இந்தியர்... பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

 
செஸ் பிரக்ஞானந்தா செஸ் பிரக்ஞானந்தா

சர்வதேச அளவில் மிகவும் மதிப்புமிக்க 'நார்வே செஸ் 2026' தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட செஸ் தொடரில், உலகின் அதிமுக்கிய மற்றும் டாப் கிராண்ட்மாஸ்டர்கள் பலரும் கலந்துகொண்டு போட்டியிட்டனர்.

பிரக்ஞானந்தா வெற்றி

இத்தொடரின் மிக முக்கிய திருப்புமுனையாக, உலக செஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனை, அவரது சொந்த மண்ணிலேயே பிரக்ஞானந்தா இரண்டு முறை வீழ்த்தி ஒட்டுமொத்த செஸ் உலகிற்கும் மாபெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

அசாத்திய மனவலிமையுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, இத்தொடரில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 போட்டிகளில் மிகப்பிரம்மாண்ட வெற்றிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தினார்.

பிரக்ஞானந்தா

உலக செஸ் வரலாற்றில் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் இந்த நார்வே செஸ் தொடரில், சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற அசைக்க முடியாத புதிய வரலாற்றுப் பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

பிரக்ஞானந்தாவின் இந்த இமாலய சாதனையைப் பாராட்டியுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், "உலக அளவில் மிகக் கடினமான நார்வே செஸ் தொடரில், தனது அசாத்தியமான மற்றும் அறிவார்ந்த ஆட்டத் திறனை  வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றுள்ள தம்பி பிரக்ஞானந்தாவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். உலக சாம்பியன் கார்ல்செனை இருமுறை வீழ்த்தி, இப்பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றைப் படைத்துத் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார். அவரது இந்தச் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்" எனப் பாராட்டியுள்ளார்.