பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலைச் சொன்ன இளம்பெண்... நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி அழைத்து செல்ல வந்த பெற்றோர்!

 
பிக்பாஸ் மலையாளம் நேஹா

மலையாள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று வரும் இளம் பெண் நேஹா பாத்திமாவை, பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளப் பிரபலமான நேஹா பாத்திமா, சக போட்டியாளரான சந்தோஷ் ராஜ் மீது தனக்கு காதல் இருப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, பெற்றோரின் சம்மதத்துடன் இந்த உறவைத் தொடர விரும்புவதாகவும் அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து வெளியான வார இறுதி நிகழ்ச்சிக்கான புரோமோவில், தொகுப்பாளர் மோகன்லால் நேஹாவின் பெற்றோரை மேடைக்கு அழைத்து வருகிறார். அப்போது, மற்ற போட்டியாளர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தும் நிலையில், நேஹா உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதாக அவரது தாயார் வேதனையுடன் கூறுகிறார். மேலும் மற்றவர்கள் அவரது உணர்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் எச்சரிக்கிறார்.

நேஹாவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் பெற்றோர் உறுதியாக இருப்பதாக மோகன்லாலும் தெரிவிக்கிறார். இதைக் கேட்டு நேஹா கண்ணீர் விடும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்றுள்ளன. எனினும், நேஹா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாரா அல்லது தொடர்ந்து போட்டியில் பங்கேற்கிறாரா என்பது அந்த எபிசோடில் தெரியவரும்.