ரூ.90 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர் - ரூ.30,000 முதலீட்டில் மாதம் ரூ.12 லட்சம் சம்பாதித்து சாதனை!

 
இளைஞர் மைக்ரோகிரீன்ஸ்

நம்மில் பலருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால், சண்டிகரைச் சேர்ந்த மோஹித் நிஜவான் என்ற இளைஞருக்கு அது வெறும் ஆரம்ப புள்ளியாகவே இருந்துள்ளது. கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற மோஹித், தனது கைநிறைய சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் விட்டுவிட்டு, முற்றிலும் மாறுபட்ட துறையான உள் அரங்கு விவசாயத்தில் கால் பதித்து இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்பாத மோஹித், வெறும் ரூ.30,000 முதலீட்டில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள 100 சதுர அடி சிறிய அறையில் மைக்ரோகிரீன்ஸ் வளர்க்கத் தொடங்கினார். ஆரம்பக் கட்டத்தில் விவசாயத்தின் நுணுக்கங்கள் மற்றும் உற்பத்தி முறைகள் அனைத்தையும் அவரே சுயமாகக் கற்றுக் கொண்டார். இந்த சிறிய சோதனை முயற்சிதான் இன்று 'கிரீனு மைக்ரோகிரீன்ஸ்' என்ற மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.

தற்போது இந்த வணிகம் பல மடங்கு விரிவடைந்து, 500 சதுர அடி பரப்பளவிலான அதிநவீன வசதிகள் கொண்ட பண்ணையாக மாறியுள்ளது. இங்கு சுமார் 60 ரேக்குகள் அமைக்கப்பட்டு, மாதத்திற்கு 12,000 தட்டுகள் மைக்ரோகிரீன்ஸ் உற்பத்தி செய்யும் அளவிற்குத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மோஹித் நிஜவனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் வருவாய் கிடைப்பதோடு, ஆண்டு வருமானமாக தோராயமாக ரூ.1.44 கோடியைப் பெற்று வருகிறார்.