தேசிய தூய்மை விருதைப் பெற்ற தேனி அல்லிநகரம்… தமிழகத்துக்கு பெருமை சேர்த்த நகராட்சி!
தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிநகரம் நகராட்சி, 2025–26-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பில் தேசிய அளவிலான விருதைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தூய்மைப் பராமரிப்பில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்துக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், 2025–26-ம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan) விருதுகள் வழங்கும் விழா நவம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
இந்த ஆண்டு 4,751-க்கும் மேற்பட்ட நகரங்கள் தூய்மை கணக்கெடுப்பில் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் மாநில அளவில் தூய்மையில் முன்னிலை வகிக்கும் நகரங்களுக்கான பிரிவில் தேனி அல்லிநகரம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டது. நகராட்சி ஆணையர் பார்கவி குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

எதன் அடிப்படையில் விருது?
குப்பைகளை வீடுகளிலிருந்து சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்தல், கழிவுகளை மேலாண்மை செய்தல், பொதுக் கழிப்பிடங்களைப் பராமரித்தல், தூய்மைப் பணியாளர்களின் நலன் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்ட 43 அம்சங்களின் அடிப்படையில் நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
