நீதிமன்றத்தில் பரபரப்பு! சுவர் ஏறி குதித்து கைதி தப்பியோட்டம்.. போலீசார் தீவிர தேடுதல்
தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்கு கார்த்திக் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
![]()
இதன் அடிப்படையில் கார்த்திக்கை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீஸ் ஏட்டுகள் நாகராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் அவரை லட்சுமிபுரத்தில் உள்ள தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக போலீசாரின் பிடியில் இருந்து கார்த்திக் தப்பி ஓடினார். நீதிமன்ற வளாகத்தில் இருந்த சுவரின் மீது ஏறி மறுபுறம் குதித்து தப்பிச் சென்றார். போலீசார் அவரை விரட்டிச் சென்றபோதும் பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து போலீஸ் ஏட்டு நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட கைதி, நீதிமன்ற வளாகத்திலேயே போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிய சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
