தேனி எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார் உயிரிழப்பு: 5 தனிப்படைகள் விசாரணை; 3 பேர் கைது!
தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பட்டாசு வெடித்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார் (56), கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சமதர்மபுரம் பகுதியில் இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்ததுடன், அதனை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
இதனைத் தட்டிக்கேட்ட செந்தில்குமார், அவர்களின் செயல்பாடுகளை செல்போனில் பதிவு செய்ய முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் முழங்கையால் தாக்கியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில்குமாருக்கு ஏற்கெனவே இதய பாதிப்பு இருந்ததாகவும், உயிரிழப்புக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை தொடர்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
