18,675 வழக்குகள் நிலுவை... தமிழகத்தில் புதிதாக 6 'போக்சோ' நீதிமன்றங்கள் அமைப்பு; உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

 
போக்சோ விழிப்புணர்வு கையேடு

தமிழகத்தில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தண்டனை பெற்றுத் தருவதற்காக, மாநிலத்தில் புதிதாக மேலும் 6 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனக்கு விரைந்து நீதி கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு, நேற்று விரிவான விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழகத்தில் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள் குறித்துச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் தரப்பில் ஒரு முக்கியப் புள்ளிவிவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

தமிழகத்தில் தற்போது நடப்பாண்டு ஜூன் 25-ம் தேதி நிலவரப்படி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,675 வழக்குகள் விசாரணையின்றி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. இவ்வளவு அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்குக் காலத்தே நீதி கிடைப்பதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கக் கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் தேவை என்ற பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

போக்சோ

தலைமைப் பதிவாளர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து, அங்குப் புதிய நீதிமன்றங்களைத் தொடங்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தென்காசி - 1 சிறப்பு நீதிமன்றம், ஈரோடு - 1 சிறப்பு நீதிமன்றம், திருப்பூர் - 1 சிறப்பு நீதிமன்றம், திருச்சி - 1 சிறப்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி - 1 சிறப்பு நீதிமன்றம், சென்னை - 1 கூடுதல் சிறப்பு நீதிமன்றம் (ஏற்கனவே உள்ள நீதிமன்றங்களுடன் கூடுதலாக)

இந்த 6 புதிய நீதிமன்றங்களும் அதிநவீன வசதிகளுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகள் நீதிமன்றத்திற்கு வரும் போது எவ்வித மன உளைச்சலுக்கும் ஆளாகாத வண்ணம் 'குழந்தைகள் நட்பு'  சூழலில் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் நிலுவையில் உள்ள 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணை இனி வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்சோ நீதிமன்றம்

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குச் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். "போக்சோ வழக்குகளில் காலம் கடந்து வழங்கப்படும் நீதி, அநீதிக்குச் சமம். எனவே, இந்த 6 புதிய நீதிமன்றங்களும் செயல்பாட்டிற்கு வரும் போது குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், குற்றங்கள் குறையவும் இது வழிவகுக்கும்" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய நீதிமன்றங்கள் அமையவுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் கூடுதல் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள்  தலைமையிலான போலீசார் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளைத் திட்டமிட்டு வருகின்றனர்.