ரேஸில் 3 பேர்... முந்தப்போவது யாரு?! கேரளாவின் புதிய முதல்வர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு - டெல்லியில் நடக்கும் க்ளைமாக்ஸ் களம்!
கேரள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில், 'அடுத்த முதல்வர் யார்?' என்ற கேள்விக்கு விடை தேட முடியாமல் காங்கிரஸ் தலைமை இன்னும் திணறி வருகிறது. கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களைக் கைப்பற்றி, ஒரு தசாப்த கால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், வெற்றிபெற்ற மகிழ்ச்சியை விட, முதல்வர் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமே காங்கிரஸை ஆக்கிரமித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (மே 13) இரவு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே இடையேயான ஆலோசனைகள் நிறைவடைந்துவிட்டன. கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்" என்று உறுதியளித்துள்ளார்.

இந்த முதல்வர் போட்டியில் நிலவும் இழுபறியைத் தீர்க்க பிரியங்கா காந்தி நேரடியாகக் களமிறங்கியுள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி-யாக இருந்த அனுபவம் மற்றும் அம்மாநிலத் தலைவர்களுடனான நெருக்கம் காரணமாக, பிரியங்கா காந்தியின் தலையீடு சுமுகமான முடிவை எட்ட உதவும் எனத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, மூன்று வெவ்வேறு துருவங்களாக இருக்கும் வேட்பாளர்களை ஒன்றிணைத்து ஒருமித்த முடிவை எடுக்க அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
தற்போது முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் மூன்று முக்கிய முகங்கள் உள்ளனர். காங்கிரஸ் மேலிடத்திற்கு மிகவும் நெருக்கமான கே.சி. வேணுகோபால். பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, ஆளுங்கட்சியைத் திணறடித்தவர் வி.டி. சதீசன். இளைய தலைமுறையின் விருப்பமான தேர்வாக இவர் இருக்கிறார். கட்சியின் மூத்த முகமான ரமேஷ் சென்னிதலா. நீண்டகால அனுபவம் கொண்ட இவரைப் புறக்கணிக்க முடியாது என்ற குரலும் கட்சிக்குள் ஒலிக்கிறது.

கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) 22 இடங்களை வென்றுள்ள நிலையில், அவர்கள் 'துணை முதலமைச்சர்' பதவியைக் கேட்டுப் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதுவும் முதல்வர் தேர்வில் தாமதம் ஏற்பட ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் மே 10-ஆம் தேதியே பொறுப்பேற்றுத் தனது பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் 'வெள்ளை புகை' கிளம்பாதது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலைக்குள் டெல்லியில் இருந்து வெளிவரும் அந்த 'ஒரு பெயர்' கேரள அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
