31 லட்சம் ஊழியர்கள்... மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியது... தமிழகத்தில் எப்போது? என்னென்ன கேள்விகள்?
நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான 'வீடுகள் பட்டியலிடுதல்' பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இதற்காக 'பிரகதி' (பெண்) மற்றும் 'விகாஸ்' (ஆண்) என்ற இரண்டு சின்னங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று தொடங்கி செப்டம்பர் 30-க்குள் அந்தந்த மாநிலங்கள் அறிவிக்கும் 30 நாட்களில் இந்தப் பணிகள் நடைபெறும். இதில் உங்கள் குடும்பத்தின் தரம் மற்றும் வசதிகள் குறித்து 33 கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் பதிலளிக்க வேண்டிய 33 கேள்விகள் என்னென்ன என்று தெரிஞ்சுக்கோங்க.
வீட்டின் தரம் எவ்வகையிலானது? தரை, சுவர் மற்றும் மேற்கூரை எதனால் ஆனது? வீட்டின் நிலைமை எப்படி உள்ளது? வீட்டில் உள்ள வசதிகள் என்னென்ன? குடிநீர் ஆதாரம், மின்சார வசதி, கழிப்பறை வகை, சமையல் எரிபொருள் (LPG/PNG) என்ன? வீட்டில் ரேடியோ, டிவி, இணைய வசதி, லேப்டாப், ஸ்மார்ட்போன், சைக்கிள், பைக் அல்லது கார் உள்ளதா? குடும்பத்தில் பிரதானமாக உட்கொள்ளப்படும் தானியம் (அரிசி/கோதுமை) எது? குடும்பத் தலைவரின் பாலினம் மற்றும் அவர் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்தவரா? போன்ற கேள்விகள் இடம் பெறும்.

தமிழகத்தில் எப்போது?
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், மக்கள்தொகை கணக்கெடுப்பு கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 17ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை. (பொதுமக்கள் தாங்களாகவே இணையதளத்தில் விபரங்களைப் பதிவு செய்யலாம்). நேரடி வீட்டுக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரையில் நடைபெறும்.
இரண்டாம் கட்டம் (மக்கள் தொகை கணக்கெடுப்பு):
முதற்கட்டப் பணிகள் செப்டம்பரில் முடிந்தவுடன், உண்மையான மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி மாதம் தொடங்கும். இதில் தான் வயது, மதம், சாதி, கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விபரங்கள் சேகரிக்கப்படும். ஒட்டுமொத்தப் பணிகளும் மார்ச் 31, 2027-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதன்முறை அறிமுகமாகும் புதிய வசதிகள்:
காகிதப் படிவங்களுக்குப் பதிலாக, கணக்கெடுப்பாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள மொபைல் செயலி மூலம் விபரங்களைப் பதிவு செய்வார்கள். பொதுமக்கள் 16 மொழிகளில் உள்ள பிரத்யேக இணையதளத்தில் தாங்களாகவே விபரங்களைப் பதிவேற்றி, 16 இலக்க அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது, 16 இலக்க எண்ணைக் காட்டினால் போதும்; ஆதார் அல்லது குடும்ப அட்டையைக் காட்ட வேண்டிய கட்டாயமில்லை.
