தமிழகம் முழுவதும் 40 ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ரெய்டு - ரூ.37 இலட்சம் ரொக்கம், ஜி-பே பணம் பறிமுதல்!

 
ஆர்.டி.ஓ. போக்குவரத்து லஞ்சம் ரெய்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.டி.ஓ. போக்குவரத்து லஞ்சம் ரெய்டு ஸ்ரீவில்லிபுத்தூர்

தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத சுமார் ரூ.37 இலட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைத் தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களிடம் ஓட்டுநர் உரிமம் (டி.எல்.), வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி.) வழங்குவதற்குப் பெருமளவில் லஞ்சம் கைமாறுவதாக வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (விஏசிபி) அதிகாரிகள் நேற்று (ஜூன் 18) மாலை தமிழகம் முழுவதும் உள்ள 40 முக்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் (எம்.வி.ஐ.) அலுவலகங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மட்டுமன்றி, அவற்றுக்கு வெளியே இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வந்த பல்வேறு தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் (டிரைவிங் ஸ்கூல்) அலுவலகங்களிலும் இந்தச் சோதனை நீடித்தது.

லஞ்சம் பணம் ஊழல்

சோதனையின் முடிவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தொகையின் விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், ஆர்.டி.ஓ. அலுவலக மேஜை அறைகள், வாகனங்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.31.85 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்சப் பணத்தை ரொக்கமாக வாங்கினால் மாட்டிக் கொள்வோம் என்று அஞ்சி, கூகுள் பே போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் பெறப்பட்ட ரூ.5.95 லட்சம் ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாகச் சுமார் ரூ.37.80 லட்சம் லஞ்சப் பணம் இந்த ஒரே நாளில் முடக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் மூலம் அரசு அதிகாரிகளுக்குச் சட்டவிரோதமான முறையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதற்கான டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ரசீதுகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.