5.73 கோடி வாக்காளர்கள்... இன்று முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ விநியோகம்... கியூ ஆர் கோடுடன் புதிய வடிவம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் எவ்விதக் குழப்பமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக, வீடு வீடாகச் சென்று 'பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று (ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.
இந்த முறை வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாளச் சீட்டுகள் நவீன தொழில்நுட்பத்துடன் அச்சிடப்பட்டுள்ளன. முதன்முறையாகப் பூத் சிலிப்பில் கியூ ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்கேன் செய்வதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி குறித்த கூடுதல் தகவல்களை எளிதில் பெறலாம். பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்குச்சாவடி மையம் ஆகியவை கட்டம் போட்டுத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

பி.எல்.ஓ. அலுவலர்கள்: தமிழகம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாகச் சென்று இந்தப் பூத் சிலிப்புகளை வழங்க உள்ளனர். இந்தப் பணியின் போது பி.எல்.ஓ. அலுவலர்களுக்கு உதவியாக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களும் உடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தமான 5.73 கோடி வாக்காளர்களுக்கும் வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பே (ஏப்ரல் 18-க்குள்) பூத் சிலிப்புகளை வழங்கி முடிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 75,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்குச் சராசரியாக 756 வாக்காளர்கள் என்ற விகிதத்தில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் விரைவாக வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இந்த பூத் சிலிப்புடன் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
