ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள்... வானில் நிகழப் போகும் வர்ணஜாலம்.... எங்கே? எப்படி, எப்போது பார்க்கலாம்?!

 
கோள்கள் வானில்

விண்வெளி ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தி. வரும் பிப்ரவரி 28ம் தேதி வானில் ஒரு மிக அரிய வானியல் நிகழ்வு நிகழவுள்ளது. சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஆறு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் காட்சியை நாம் பூமியிலிருந்து காண முடியும். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் தத்தமது சுற்றுவட்டப்பாதையில் சுற்றும்போது, பூமியிலிருந்து பார்க்கும்போது அவை அனைத்தும் ஒரே வரிசையில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு 'கோள்களின் அணிவகுப்பு' (Planetary Parade) என்று அழைக்கப்படுகிறது.

கோள்கள்

வெள்ளி (Venus), வியாழன் (Jupiter), சனி (Saturn) மற்றும் செவ்வாய் (Mars) ஆகிய நான்கு கோள்களை நம்மால் வெறும் கண்களால் தெளிவாகக் காண முடியும். யுரேனஸ் (Uranus) மற்றும் நெப்டியூன் (Neptune) ஆகிய கோள்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அவற்றைச் சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் மட்டுமே காண இயலும். பிப்ரவரி 28 அன்று சூரிய மறைவுக்குப் பின் இந்தத் தோற்றம் தெளிவாகத் தெரியும். வானத்தின் மேற்கு அல்லது தென்மேற்கு திசையை நோக்கிக் கவனித்தால், பிரகாசமான புள்ளிகளாக இந்தக் கோள்கள் வரிசையாகத் தெரிவதைக் காணலாம்.

சிறிய கோள்

உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தோ அல்லது உயரமான இடங்களிலிருந்தோ இதனைப் பார்க்கலாம். வானில் எந்தப் புள்ளியில் எந்தக் கோள் இருக்கிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள 'Star Walk' போன்ற வானியல் செயலிகளைப் பயன்படுத்தலாம். இது உங்கள் மொபைல் கேமராவைப் பயன்படுத்தி வானில் உள்ள கோள்களை எளிதாக அடையாளம் காட்ட உதவும். மேகமூட்டம் இல்லாத தெளிவான வானிலை இருந்தால், இந்த அபூர்வ நிகழ்வை ரசிக்கத் தவறாதீர்கள்.