4,133 பள்ளிகளில் மாணவர்களே கிடையாது... 19,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் அதிர்ச்சி - மேற்குவங்கத்தில் கொடுமை!
மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மேற்குவங்க மாநிலத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் 5,663 பள்ளிகளில் ஒரு மாணவர் கூடச் சேர்க்கை பெறவில்லை. இதில் 73 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் (4,133 பள்ளிகள்) மேற்குவங்க மாநிலத்தில் மட்டுமே அமைந்துள்ளன. மாணவர்கள் எவருமே இல்லாத இந்த 4,133 பள்ளிகளில் 19,502 ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநிலம் 313 பள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது (இப்பள்ளிகளில் 177 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்).

மேற்குவங்கத்தில் ஒருபுறம் மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் 19,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், மறுபுறம் 6,769 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 2.29 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தனியார் பள்ளிகள் மத்தியக் கல்வித் தளத்தில் தரவுகளைப் பதிவேற்றம் செய்த போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளே (மாணவர்கள் விவரங்களைப் பதிவேற்றாமல் ஆசிரியர்களின் விவரங்களை மட்டும் பதிவேற்றியது) இந்த நிலைக்குக் காரணம் எனவும், ஆசிரியர்களைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மேற்குவங்க பள்ளிச் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
