"மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை" - உதவிப் பேராசிரியர் நியமனத் தாமதத்திற்கு அன்புமணி கண்டனம்!

 
அன்புமணி அன்புமணி

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடந்து 6 மாதங்கள் கடந்தும், அதன் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாததற்குக் பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 61 துறைகளில் காலியாக இருக்கும் 2,708 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வை சுமார் 42,000-க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த பட்டதாரிகள் எழுதியுள்ளனர். தேர்வு முடிந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெறும் 5 துறைகளுக்கான முடிவுகளை மட்டுமே வெளியிட்டு, அதில் சிலருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. மீதமுள்ள 56 துறைகளுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டும், அதன் முடிவுகளை வெளியிடாமல் அரசு தொடர்ந்து முடக்கி வைத்துள்ளதாகப் பாமக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியர் ஆசிரியை பேராசிரியர்

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ஆம் தேதியான இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2-ஆம் ஆண்டு மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தச் சூழலிலும், புதிய உதவிப் பேராசிரியர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப் போதிய ஆசிரியர்கள் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு கல்லூரிகளில் 8,000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடப்பதால் உயர்கல்வியின் தரம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து 40 நாட்களுக்கு மேலாகியும், தேர்வு வாரியம் முடிவுகளை வெளியிடாமல் காலம் கடத்துவது அநியாயமானது என்று அவர் சாடியுள்ளார். எனவே, மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, மீதமுள்ள 2,705 பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை இந்த ஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் உடனடியாக வெளியிட்டு, தகுதியானவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.