“ஒரு வாரமாகத் தண்ணீர் வரலை... CM என்ன மாசம் ரூ.10,000 ஆ தர்றாரு?” - காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
சென்னை பெரம்பூர் அருகே உள்ள கொடுங்கையூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடுங்கையூர் பகுதியில் சுமார் 2,500 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 7 நாட்களாகக் குடிநீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அலுவலகங்களுக்குச் செல்வோரும், பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குடிநீரை விலைக்கு வாங்கும் அளவிற்குத் தங்களால் பணம் செலவழிக்க முடியாது என்று கொதித்தெழுந்த பொதுமக்கள், "முதலமைச்சர் என்ன எங்களுக்கு மாதம் 10,000 ரூபாயா போடுறாரு?" என்று வேதனையுடனும் ஆவேசத்துடனும் கேள்வி எழுப்பினர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், தண்ணீர் வந்தால்தான் கலைந்து செல்வோம் என்று மக்கள் உறுதியாக நின்றனர்.
இதனையடுத்து குடிநீர் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உடனடித் தீர்வு காணப்பட்டதுடன், இன்று தங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்படுவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
