"தவெகவில் பாலியல் வன்கொடுமைக்கு தனிப்பிரிவு தேவை - மு.க.ஸ்டாலின் கடும் தாக்குதல்!

 
ஸ்டாலின்

கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக மற்றும் அதன் முன்னணி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து மிகக் காரசாரமாக விமரிசித்துள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்டப் பாராட்டு விழாவில் கூட்டணிக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தவெகவினரின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களைக் சுட்டிக்காட்டி அவர் கடுமையாகப் பேசினார்.

ஸ்டாலின்

தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் மீது தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புகார்களும் எழுந்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

"அரசியல் கட்சிகளில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி என்று பல்வேறு பிரிவுகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தவெகவில் அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளைப் பார்த்தால், பாலியல் வன்கொடுமைகளுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தனியாகப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் போலிருக்கிறது" என்று எள்ளல் தொனியில் விமரிசித்தார்.

ஸ்டாலின்

அண்மைக் காலமாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுகவிற்கும் இடையே கருத்து மோதல்கள் உச்சமடைந்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த நேரடித் தாக்குதல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஒழுக்கம் தொடர்பாக திமுக மற்றும் தவெக தலைவர்கள் மாறி மாறி முன்வைத்து வரும் கடுமையான விமர்சனங்கள், வரவிருக்கும் தேர்தல் களம் எந்த அளவிற்குச் சூடுபிடித்துள்ளது என்பதை உணர்த்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.