இந்த அரசில் குதிரை வேகம் உண்டு, பேரம் இல்லை - முதல்வர் விஜய் பேச்சு

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, முதலமைச்சர் விஜய் அவர்கள் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆக்ரோஷமாகவும், அதே சமயம் நிதானமாகவும் உரையாற்றினார்.

திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட 'குதிரை பேரம்' மற்றும் 'சோபா செட்' புகார்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர், "எனது அரசு நிர்வாகத்தில் 'குதிரை வேகத்தை'க் கொண்டிருக்கும். மக்கள் பணிகளை மின்னல் வேகத்தில் செய்து முடிப்பதிலேயே எங்கள் கவனம் இருக்கும். ஆனால், ஒருபோதும் எனது அரசு 'குதிரை பேரத்தில்' ஈடுபடாது. தார்மீக அடிப்படையிலும், ஜனநாயக முறைப்படியுமே எங்களுக்குத் தேவையான ஆதரவைத் திரட்டியுள்ளோம். இதில் மறைமுகமான பேரங்களுக்கு இடமில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

விஜய்

கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கை குறித்துப் பேசிய அவர், தனது அரசியல் பாதையைத் தெளிவுபடுத்தினார். "காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று மட்டுமல்ல, அதுவே எங்களது அடிப்படை நிலைப்பாடும் கூட. தவெக அரசு எப்போதும் 'மதச்சார்பற்ற' கொள்கையிலேயே உறுதியாகப் பயணிக்கும். எல்லா மதத்தினரையும், எல்லாத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் சமத்துவ ஆட்சியாக இது இருக்கும்" என உறுதி அளித்தார்.

விஜய்

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்த முதலமைச்சர், பழைய திட்டங்களில் உள்ள குறைகளை நீக்கி, புதிய வேகத்துடன் அவற்றைச் செயல்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்வோம் என்று தெரிவித்த அவர், அதே சமயம் அடிப்படை ஆதாரமற்ற புகார்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.