இந்த தேர்தலில் போட்டியில்லை... மநீம.,வுக்கு 1 ராஜ்யசபா சீட்... நடிகர் கமல் பேட்டி!

 
கமல்

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை எனவும், மக்கள் நீதி மையத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நடைப்பெற்ற கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவடைந்துள்ளது.


காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இருந்த போதும் அக்கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக இரு கட்சிகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அண்ணா அறிவாலயத்திற்கு வந்த கமல்ஹாசனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார்.

கமல்

இதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை எனவும் தானும் போட்டியிட போவதில்லை எனவும் தெரிவித்தார் தங்களது கட்சிக்கு ஒரு மாநிலங்களவை பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்தக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web