"டெல்லி கிடையாது.. அமெரிக்காவே மிரட்டினாலும் ஸ்டாலின் பயப்பட மாட்டார்" - டிடிவி தினகரனுக்கு ஓ.பிஎஸ். பதிலடி!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து டி.டி.வி. தினகரன் தெரிவித்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், ஓ.பி.எஸ்-ஸின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் 'டெல்லி பயணம்' குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், "நாங்கள் (கூட்டணி கட்சிகள்) டெல்லிக்குச் சென்றாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். அந்தப் பயத்தில்தான் அவர் ஏதேதோ பேசுகிறார்" என்று விமர்சித்திருந்தார்.

டி.டி.வி. தினகரனின் இந்தப் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "டெல்லி என்ன... அமெரிக்காவே திரண்டு வந்து மிரட்டினாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கும் அஞ்சமாட்டார்; எந்தக் காலத்திலும் யாருக்கும் பணிய மாட்டார். திரு. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் வரை தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது" என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில் திமுகவைக்கடுமையாக விமர்சித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், அவரது துணிச்சலைப் பாராட்டியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகக் கட்சிகளுக்கிடையேயான புதிய அரசியல் சமன்பாடுகளாக இது பார்க்கப்படுகிறது.
