கொளத்தூரில் குளறுபடி இல்லை' - இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நினைவகம் மற்றும் நுண்கட்டுப்பாட்டுப் பொறிகளைச் சரிபார்க்கும் பணியில் இதுவரை எவ்வித குளறுபடிகளும் கண்டறியப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதியில் பெறப்பட்ட வாக்குகள் தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட மனுவைத் தொடர்ந்து, அத்தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சரிபார்க்கும் பணி சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனப் பொறியாளர்களின் மேற்பார்வையில் இரண்டு கட்டங்களாகச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டதில் எவ்வித முரண்பாடுகளும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாகத் திமுக முதன்மை முகவர்கள் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ். சமீரன் விளக்கமளித்துள்ளார். அடுத்த கட்டமாக 500 முதல் 1,400 வாக்குகள் வரை செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக நடைபெற்று வரும் இந்தச் சரிபார்ப்புப் பணிகள் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
