"என் மீதான குற்றத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை" - அன்பில் மகேஷ் ஜாமின் மனு!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கின் பின்னணியில் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது ஜாமின் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, நகர் ஊரமைப்புத் துறை அனுமதி உள்ளிட்ட நிலுவையில் உள்ள அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பி.டி.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அன்பில் மகேஷின் முன் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஜாமின் மனு எதிர்வரும் வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வரவுள்ளது. அந்த மனுவில் அன்பில் மகேஷ் தரப்பில், “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித நேரடி மற்றும் சட்டப்பூர்வ ஆதாரங்களும் இல்லை. தனியார் பள்ளி நிர்வாகங்கள் சமர்ப்பித்த கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்கள் மீது பள்ளிக்கல்வித் துறை வழக்கம் போலச் சட்டப்பூர்வ விதிகளின்படியே முடிவெடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மற்ற நபர்கள் எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால், அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. எனக்குத் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சைகளும் தேவைப்படுவதால், மனிதநேய அடிப்படையில் ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
