“பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலமில்லை... ஹைட்ரஜன் தான் இந்தியாவின் எதிர்காலம் - அமைச்சர் நிதின் கட்காரி!
டெல்லியில் நடைபெற்ற ‘Busworld India 2026’ மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வாகன உற்பத்தியாளர்களுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த நிதின் கட்காரி, "பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இனி வருங்காலம் இல்லை. நீங்கள் இன்னும் அந்தத் திசையிலேயே உங்கள் தொழிலை விரிவுபடுத்தத் திட்டமிட்டால், ஒரு நண்பனாகச் சொல்கிறேன், உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்காது. மாற்று எரிபொருளுக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.

இந்தியா ஆண்டுதோறும் ₹22 லட்சம் கோடி மதிப்பிலான புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைத்து, 2070-க்குள் 'நிகர பூஜ்ஜிய உமிழ்வு' இலக்கை அடைய இந்த மாற்றம் அவசியம். உயிரி எரிபொருட்கள், எத்தனால், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.
"ஹைட்ரஜன் தான் எதிர்காலத்தின் உண்மையான எரிபொருள்" என்று குறிப்பிட்ட கட்காரி, ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் பேருந்துகள் மற்றும் லாரிகள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மின்சாரப் பேருந்துகளுக்கான தேவை 1.5 லட்சம் யூனிட்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 70,000 பேருந்துகளைத் தயாரிக்கும் திறன் மட்டுமே உள்ளது. எனவே, உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தித் திறனை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும், விலையை விடத் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
