"பலாத்கார வீடியோ வெளியான விவகாரத்தில் நீதி கிடைக்கலை... நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது" - ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நடிகை கடிதம்!

 
பாவனா திலீப் பாவனா திலீப்

கேரளாவையே உலுக்கிய மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிமன்றக் காவலில் இருந்த மெமரி கார்டு (வீடியோ ஆதாரங்கள்) சட்டவிரோதமாகப் பார்க்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஹனி எம். வர்கீஸுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது எனப் பாதிக்கப்பட்ட நடிகை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹனி எம். வர்கீஸுக்கு பதவி உயர்வு அளிக்கக்கூடாது எனப் பாதிக்கப்பட்ட நடிகை ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.

பாவனா நீதிபதி

நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மெமரி கார்டு, பலமுறை சட்டவிரோதமாகத் திறக்கப்பட்டு வீடியோ காட்சிகள் பார்க்கப்பட்டுள்ளன. இது குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நீதிபதி தவறிவிட்டார் என நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதாரங்கள் சிதைக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி தரப்பில் மெத்தனப் போக்கு நிலவுவதாகவும், இது பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உரிமையைப் பாதிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 17, 2017 அன்று திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் சென்றபோது நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கார் டிரைவர் பல்சர் சுனில் மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக முன்னணி நடிகர் திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பாவனா

அந்த மெமரி கார்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோது, பலமுறை சட்டவிரோதமாகத் திறக்கப்பட்டிருப்பது தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், நடிகையின் இந்த திடீர் கடிதம் நீதிபதி ஹனி எம். வர்கீஸின் பதவி உயர்வு குறித்த முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.