"கமிஷன் பேச்சுக்கே இடம் கிடையாது; லஞ்சம் கேட்டால் புகாரளிக்கலாம்" – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
"தவெக ஆட்சியில் அரசு டெண்டர்களுக்குப் பர்சென்டேஜ் வாங்கும் வழக்கமே கிடையாது" என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், த.வெ.க. அரசின் நிர்வாகப் வெளிப்படைத்தன்மை குறித்தும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், "எங்கள் த.வெ.க. ஆட்சியில் அரசுப் பணிகளுக்கான டெண்டர்களில் பர்சென்டேஜ் வாங்கும் வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கமிஷன் என்ற பேச்சுக்கே எங்கள் அகராதியில் இடம் கிடையாது. தூய்மையான, நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதே எங்களது முதன்மை இலக்கு."
மேலும், அரசுத் துறைகளில் லஞ்சத்தை ஒழிக்கப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர், "அரசு அதிகாரிகள் யாரேனும் பொதுமக்களிடமோ அல்லது ஒப்பந்ததாரர்களிடமோ லஞ்சம் கேட்டால், அதனைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
இதற்கென அரசுத் தரப்பில் பிரத்யேகப் புகார் எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிற்குப் பொதுமக்கள் உடனடியாகத் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம். லஞ்ச ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான சட்டப்படியான நடவடிகைகளை எடுக்கும்" என எச்சரித்துள்ளார்.
