"என் ஆட்சியில் முறைகேடுக்கு இடமில்லை!".. பதவியேற்ற 14 நாட்களில் மந்திரியை டிஸ்மிஸ் செய்த நேபாள பிரதமர் ‘பாலன்’ ஷா!
நேபாளத்தின் இளம் பிரதமர் பாலேந்திர ஷா (35), தனது அமைச்சரவையில் இருந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார். தனது மனைவியின் வேலைக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பதவி ஏற்ற 14 நாட்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் தொழிலாளர், வேலை வாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்புத்துறை அமைச்சராக தீப் குமார் ஷா (RSP கட்சி) கடந்த மார்ச் 27-ஆம் தேதி பதவியேற்றார். இவரது மனைவி ஜுனு ஸ்ரேஸ்தா, ஏற்கனவே நேபாளத்தின் 'சுகாதார காப்பீட்டு வாரியத்தில்' (Health Insurance Board) உறுப்பினராக இருந்தார். அவரது பதவிக்காலம் முடிந்த பிறகும், மீண்டும் அதே பதவி அவருக்குக் கிடைக்க அமைச்சர் தீப் குமார் ஷா தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்குத் துணை நின்றதாகக் கூறப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் நிஷா மேத்தாவுக்கும் பிரதமர் பாலேந்திர ஷா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேபாளத்தின் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் தலைவர் ரபி லாமிச்சனே, இது குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்திய பிறகு, பிரதமர் பாலேந்திர ஷாவுக்குப் பரிந்துரை கடிதம் எழுதினார். "கட்சியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது" என அவர் வலியுறுத்தியிருந்தார்.
புகார் வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, தீப் குமார் ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் பாலேந்திர ஷா நேற்று உத்தரவிட்டார். தற்போது காலியாக உள்ள தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் பொறுப்பை பிரதமரே நேரடியாக ஏற்றுள்ளார்.

யார் இந்த பாலேந்திர ஷா?
'பாலன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பாலேந்திர ஷா, ஒரு முன்னாள் ராப் பாடகர் (Rapper) மற்றும் சிவில் இன்ஜினியர் ஆவார். கடந்த 2025-இல் நேபாளத்தில் நடந்த 'Gen Z' இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, 2026 பொதுத் தேர்தலில் இவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. நேபாள வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (35 வயது) பிரதமரானவர் இவர்தான்.
ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சியைப் பிடித்த இவர், தனது முதல் அதிரடியாக முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை கைது செய்து உலகையே அதிர வைத்தார். தற்போது தனது சொந்தக் கட்சி அமைச்சரையே ஊழல் புகாரில் நீக்கி இருப்பதன் மூலம், "தவறு செய்தால் எவர் ஒருவரையும் மன்னிக்க மாட்டேன்" என்கிற வலுவான செய்தியைப் பிரதமர் பாலேந்திர ஷா உலகுக்குத் தெரிவித்துள்ளார்.
