குழந்தைகளுக்கான அவசர மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு விளக்கம்!

 
குழந்தை

அரசு மருத்துவமனைகளில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கான அவசர மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் சுவாசம் சீரடையவும், நுரையீரல் சுருங்காமல் விரியவும் பயன்படும் 'சர்ஃபேக்டன்ட்' மருந்து அவசர சிகிச்சைகளுக்கு மிகவும் அவசியமானதாகும். இது சிறப்பு மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசு

தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வெளியில் வாங்கும் நிலை உள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.

குழந்தை பிரசவம்

இந்தச் செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ள தமிழக அரசு, மருத்துவமனைகளில் அத்தகைய மருந்துத் தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், பச்சிளம் குழந்தைகளுக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குவதில் அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.